Pages - Menu

Thursday 6 October 2016

இறையடியார் லூர்து சேவியர் சவரிராயன் அவர்களின் புனிதர் பட்ட ஆயத்தப்பணிகள்

இறையடியார் லூர்து சேவியர் சவரிராயன் அவர்களின் புனிதர் பட்ட ஆயத்தப்பணிகள்

-அருள்பணி.செ.இன்னோசென்ட், 
வேண்டுகையாளர்

அன்புள்ள வாசகர்களே!  குடந்தை மறைமாவட்டம் பூண்டி அன்னையின் திருத்தலத்தில் உழைத்து இறைவனடி சேர்ந்த அருள்பணி. வி.எஸ்.லூர்து சேவியர் அவர்களை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் முதல் படியாக, உரோமையிலுள்ள புனிதர் பட்டம் வழங்க பரிந்துரைக்கும் பேராயம் அருள்தந்தை அவர்களை 04.04.2016 அன்று இறையடியார் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது. நமது இறையடியாரை புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளை தொடர்ந்து நடத்த அனுமதியும் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நம் இறையடியார் லூர்து சேவியர் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தபோதும், அவரது மறைவுக்குப்பின்னும், இறைமக்கள் இறையடியாரின் பரிந்துரையால் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகளை, புதுமைகளை சேகரித்து வருகிறோம். நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது சாட்சியங்களை கடிதம் மூலமாக அனுப்பி வருகிறார்கள். பூண்டி அன்னைத் திருத்தலத்திற்குச் சென்று நேரடியாக பதிவும் செய்து வருகிறார்கள். அவைகளில் ஒரு சிலவற்றை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு இதழிலும் வெளியிடுவதில் பெருமைக் கொள்கிறோம்.

அதைப் போன்ற நன்மைகளை நீங்களும் பெற்றிருந்தால், உங்களது சாட்சியங்களை கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பூண்டி அன்னையின் திருத்தலத்தில் பதிவு செய்யலாம். பல புதுமைகளை பூண்டித்தாயின் வழியாக இறைவனிடமிருந்து பெற்றுத்தந்த நம் இறையடியார் லூர்து சேவியர் அவர்களிடம் வெண்டிக்கொள்ளலாம். உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி. இப்பணிக்கு தங்களின் மேலான பொருளுதவியை திருத்தலத்திற்கு அனுப்பலாம்.

என் உயிர் ஓர் வரலாற்று சாட்சி

எனது பெயர் அ.அருள்மேரி என்னும் செபஸ்தியம்மாள். நான் தஞ்சை மறைமாவட்டம் புதுக்கோட்டை பங்கில் உள்ள வடக்குப்பட்டி என்னும் கிளைப்பங்கில் 1956இல் வெள்ளிக்ழமை அன்று தந்தை: சவரிமுத்து, தாய்: அன்னம்மாள் என்ற தம்பதியருக்கு பிறந்த முதல் பெண்குழந்தை. நான் பிறந்த 6‡வது மாதத்தில் என் பெற்றோர் என்னைத் தூக்கிக் கொண்டு ஓரியூர் புனித அருளானந்தர் கோவிலுக்கு சென்றார்கள். எனக்கு செபஸ்தியம்மாள் என்ற ஞானஸ்நான பெயரை புதுக்கோட்டையில் பெற்றிருந்தாலும், செம்மண் புனிதர் அருளானந்தரின் நினைவாக அருளாயி அம்மாள் என்றே என்னை அழைத்திட ஆசைப்பட்டு இவ்வழக்கப்பெயரை ஓரியூரில் வைத்தார்கள். நாங்கள் குடும்பமாக மாட்டுவண்டியில் சென்றிருந்தோம். ஓரியூரிலிருந்து திரும்புகையில் மாட்டுவண்டியில் உள்ள சக்கரத்தின் அச்சு முறிந்ததால், அவ்வண்டியை அங்கே விட்டுவிட்டு கால்நடையாகவே என் பெற்றோர் என்னை சுமந்துகொண்டு வடக்குப்பட்டி வந்து சேர்ந்தார்கள். இந்நிகழ்வுக்கு பின் ஒருசில தினங்களில் என் தாய் அம்மை நோயினால் இறந்துபோனார்கள். என் தந்தையோ பிறப்பிலிருந்தே கால் ஊனமானவர். என் தாயின் இறப்புக்குப்பின் என்னை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். என் தாயின் பிரிவுக்குபின் இரண்டு வாரத்தில் எனக்கு வாந்தியும், பேதியும் ஏற்பட்டதால் நான் இறக்கும்தருவாயில் இருந்தேன். ஊனமான என் தந்தை திருச்சி பெரிய அரசு மருத்துவமனையில் நான்கு மாதம் வைத்துக் காப்பாற்ற முயற்சித்தார். அங்கு மருத்துவர்கள் இந்த குழந்தை பிழைக்காது என வீட்டுக்கு போக சொல்லிவிட்டார்கள். என் தந்தையோ சிங்கப்பூரில் இருபது வருடத்திற்கு மேலாக சம்பாதித்த பணத்தைகொண்டு தனியார் மருத்துவமனையிலும் செலவு செய்து என்னை காப்பாற்ற முயற்சித்தார். என் அம்மா வெள்ளிக்கிழமை இறந்ததாலும், நான் வெள்ளிக்கிழமை பிறந்ததாலும் பலமுயற்சிகள் எடுத்தும் அவர் சந்தித்தது தோல்வியே. ஆறு, ஏழு மாதமான இந்த பொம்பள புள்ளையை தாய்ப்பால் இல்லாமல் எப்படி காப்பாற்ற முடியும். இந்தப்புள்ளை இறந்தால் அது அப்படியே போகட்டும். இனிமேல் செலவு செய்யாதே என என் உறவினர்கள் கூறினார்கள். அப்போது திருச்சி உறையூரில் அற்புதசாமி என்பவர் வசித்துவந்தார். என் தந்தையின் உறவினரான அவர், எதார்த்தமாக என் அப்பாவிடம், ‘ஏனப்பா இப்படி கஷ்டப்படுற? பூண்டியில் லூர்து சேவியர்ன்னு ஒரு சாமியார் இருக்காரு. அவருகிட்ட போய் ஒரே ஒரு முறை மந்திரிச்சிட்டு வா. அதுலயும் சரியாகலைன்னா விட்டுடு. தயவுசெய்து உன் புள்ளையை தூக்கிக்கிட்டு போ’ என்றதும், என் அப்பா மிகுந்த நம்பிக்கையோடும், சந்தோ­த்தோடும் என்னை சுமந்து கொண்டு பூண்டிக்கு உடனே வந்தார். அங்கிருந்த புனித தந்தையை நேரடியாக சந்தித்து பின்வருமாறு கூறினார். ‘சாமி, என் மனைவி இந்த புள்ளையை பெததுட்டு ஆறு, ஏழு மாசத்துலேயே செத்துட்டா. தாயில்லா இந்த புள்ளைக்கு வாந்தி, பேதி நிக்கல, டாக்டருங்க, இந்த புள்ளை பொழைக்காதுன்னு சொல்லிட்டாங்க. நீங்கதான் சாமி காப்பாத்தனும். மந்திரிச்சி கொடுங்க சாமி’ என்றதும், நகைச்சுவை தன்னை இயற்கையாகவே கொண்ட தந்தை. லூர்து சேவியர் என்னை பார்த்துவிட்டு, அடடா உன் புள்ளை ‘பொழைக்காதுய்யா, செத்துப்போக போதுய்யா, நீ என்னய்யா செய்யப்போற?’ என்று கூறினார். இதைக்கேட்ட என் தந்தையோ தலையில் அடிச்சிக்கிட்டு, ‘நான் என்ன பண்ணுவேன் சாமி, என் பொண்டாட்டியும் இல்லை. இப்ப புள்ளையும் இல்லையா’ என அழுதுபுலம்பினார். இதைக் கண்ட தந்தை. லூர்து சேவியர், சிரித்த முகத்தோடு, என் கையையும், என் தந்தையின் கையையும் பிடித்துவிட்டு, ‘உன் புள்ளை சாகாதுய்யா, இப்ப என்னய்யா ஆறு, ஏழு மாசம் தானய்யா ஆவுது. நோய் சரியாயிடும்ய்யா, கவலைப்படாம புள்ளையை தூக்கிக்கிட்டு போ, இதுக்கு சாவு இப்ப இல்லைய்யா’ என்று மந்திரித்துவிட்டு அனுப்பி வைத்தார். சந்தோ­த்தோடு என் அப்பா வடக்குப்பட்டி போனார். இன்று எனக்கு ஐம்பத்தொன்பதிலிருந்து அறுபது வயதாகப்போகிறது. என் வாழ்க்கை பயணத்தில் பல நோய்கள், தடைகள், பிரச்சனைகள், ஆபத்து விபத்துக்கள். இந்த போராட்டத்தில் இதுவரை அவர் வழியாக பூண்டி மாதா எனக்கு செய்த நலன்களுக்கு நன்றி. அருள்தந்தை. லூர்து சேவியர் ஓர் புனித தந்தை என்பதற்கு என் உயிர் ஓர் வரலாற்று சாட்சி. பூண்டி அன்னைக்கும் புதுமை தந்தைக்கும் நன்றி!

இப்படிக்கு
அருளாயி,க/பெ. பால்ராஜ், சின்னராணிபட்டி, வத்தலைக்கோட்டை (அஞ்சல்), குளத்தூர் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்,

No comments:

Post a Comment

Ads Inside Post